முல்லா ஒரு கழுதையை மிகச் செல்லமாக வளர்த்து வந்தார். அது ஒரு நாள் வெளியே மேயும் போது காணாமல் போய்விட்டது. கழுதை காணாமல் போன தகவலை பதறியடித்துக்கொண்டு முல்லாவிடம் சொல்லிய ஊர்க்காரர்களிடம் முல்லா, ‘‘அப்பாடா... ரொம்ப நல்லதாய்ப் போனது’’ என்றார். ‘‘உங்கள் கழுதை காணாமல் போய் விட்டதென்கிறோம்.. எப்படி அதை நல்லதென்கிறீர்கள்?’’ என்று கேட்டனர். முல்லா, ‘‘நான் அதன்மேல் சவாரி போயிருந்தால் நானும் அதனுடன் காணாமல் போயிருப்பேன்... நல்லவேளை’’ என்றாராம்.
ஒரு நாள் முல்லாவின் பக்கத்து வீட்டுக்காரர், முல்லாவை அழைத்து, ‘‘உங்கள் கழுதையை இரவல் தர முடியுமா?’’ என்று கேட்டார்.முல்லா, ‘‘முடியாததற்கு வருந்துகிறேன். ஏற்கெனவே கழுதையை வாடகைக்கு விட்டு விட்டேன்’’ என்றார்.முல்லா பக்கத்து வீட்டுக்காரரிடம் இதைச் சொல்லிக் கொண்டிருக்கும் போது முல்லாவின் பின் தொழுவத்திலிருந்து கழுதையின் கனைப்பு கேட்கத் தொடங்கியது. பக்கத்து வீட்டுக்காரர் முல்லாவிடம், ‘‘கழுதை அங்கிருந்து சத்தமிடுகிறதே முல்லா’’ என்றார். உடனே கோபத்துடன், ‘‘என் வார்த்தையை விட கழுதையின் வார்த்தைதான் உனக்கு முக்கியம்... உனக்கு வெட்கமாய் இல்லை’’ என்றார் முல்லா.
ஒரு ராஜா முல்லாவை தன் அரண்மனைக்கு ஒரு நாள் விருந்துண்ண அழைத்தார். அரசனின் சமையல்காரர் சமைத்த முட்டைக்கோஸ் கறி எல்லாவற்றையும் விட பிரத்யேக சிறப்புடன் சமைக்கப்பட்டிருந்தது. விருந்துக்குப் பிறகு ராஜா முல்லாவிடம் ‘‘முட்டைக்கோஸ் கறி எப்படி இருந்தது?’’ என்றார். முல்லா, ராஜாவிடம் ‘‘மிக ருசியாக இருந்தது’’ என்றார். ராஜா, ‘‘மறக்க இயலாத சுவையென்று நான் நினைத்தேன்’’ என்றார்.
முல்லா கூடுதலாகவே, ‘‘நீங்கள் சொல்வது சரிதான்... தின்னத் திகட்டாத ருசி’’ என்றார். ராஜா முல்லாவிடம், ‘‘ஆனால் நீங்கள் ருசியானது என்று மட்டுமே சொன்னீர்கள்? என்று குறிப்பிட்டுச் சொன்னார்.‘‘உண்மைதான். நான் ராஜாவுக்கு அடிமையே தவிர... முட்டைக்கோஸ§க்கு அடிமை இல்லை’’ என்று முல்லா பதிலளித்தார்.
முல்லாவின் தெருவில் குடியிருக்கும் ஒருவர் முல்லா வீட்டுக்கு வந்தார். ‘‘முல்லா, உங்கள் வீட்டுக் கொடியை எனக்கு இரவல் தரமுடியுமா?’’ என்று கேட்டார்.
முல்லா, ‘‘முடியாது’’ என்றார்.தெருக்காரர், ‘‘ஏன் முடியாதென்கிறீர்கள் முல்லா?’’ என்றார்.
முல்லா, ‘‘கொடியில் மாவு உலரப் போட்டிருக்கிறேன். தரமுடியாது’’ என்றார் முல்லா.
தெருக்காரர், ‘‘கொடியில் மாவை உலரப் போட முடியுமா?’’ என்றார்.
முல்லா, ‘‘இரவல் தருவதை விட அதுவொன்றும் சிரமமான காரியம் இல்லை’’ என்றார்.
முல்லாவின் ஊரில் ஒரு புதிய கட்டடம் கட்டப்பட்டது. அடித்தளத்திற்காகத் தோண்டும்போதும், கட்டுமான வேலையிலும் மண்ணும் கல்லும் பெரிய குப்பையாக தெருவில் குவிந்துவிட்டது. அந்தக் குப்பை ஊரிலுள்ள எல்லாரையும் தொந்தரவு செய்தது. ஒரு நாள் முல்லா அந்தத் தெருவுக்குள் கடப்பாறையுடன் வந்து ஒரு குழி வெட்டத் தொடங்கினார்.
‘‘முல்லா..! ஏன் திடீரென்று இங்கே வந்து குழிவெட்டிக் கொண்டிருக்கிறீர்கள்?’’ என்றார் பாதசாரி ஒருவர்.
‘‘மலைபோல் குவிந்திருக்கும் கட்டடக் கழிவை நான் தோண்டும் குழியில் போட்டு மூடிவிடுகிறதுதான் என் திட்டம்’’ என்றார் முல்லா.
பாதசாரி முல்லாவிடம், ‘‘அப்படியென்றால், இக்குழியை வெட்டும்போது வெளியே குவியும் மண்ணை என்ன செய்யப்போகிறீர்கள் முல்லா?’’ என்றார்.
முல்லா கோபப்பட்டு, ‘‘எல்லாவற்றுக்கும் நானே பொறுப்பாக முடியுமா?’’ என்றார்
No comments:
Post a Comment